தமிழ்நாட்டில் புதிதாக ஐபோன் உற்பத்தி ஆலை

தமிழ்நாட்டின் ஓசூரில் ஐபோன் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை துவங்க டாடா குழுமம் ரூ. 5 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இதற்கென தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கார்ப்பரேஷன் டாடா எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்திற்கு ஓசூரில் 500 ஏக்கர் நிலத்தை ஒதிக்கி உள்ளது.

இந்த முதலீடு ஆலையின் திறன் மற்றும் தேவைக்கு ஏற்ப ரூ. 8 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த ஆலையில் ஆப்பிள் நிறுவன போன்களுக்கு தேவையான பாகங்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்திற்கு டைட்டன் லிமிட்டெட் பிரெசிஷன் என்ஜினியரிங் பிரிவு மற்றும் டைட்டன் என்ஜினியரிங் மற்றும் ஆட்டோமேஷன் லிமிட்டெட் ஒத்துழைப்பு வழங்க இருக்கின்றன. அக்டோபர் 2021-க்குள் புதிய ஆலையில் மொத்தம் 18 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுவர். இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள்.

புதிய முதலீடு பற்றி டாடா குழுமம் மற்றும் ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் சமீபத்திய சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் புதிய திட்டத்தை செயல்படுத்த டாடா குழுமம் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது.