மற்ற மாடல்கள் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலையில் ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. புதிய விலை குறைப்பு கேலக்ஸி ஏ21எஸ் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 16499 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இரு வேரியண்ட்களும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை சாம்சங் மற்றும் இதர விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18499 இல் இருந்து ரூ. 17499 ஆக மாறி இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 850 பிராசஸர், அதிகபட்சம் 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 9 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.