டிக்டாக் தடையை தொடர்ந்து டிங்டாங் ஆப் இப்போ வைரல்

இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. டிக்டாக் தடை செய்யப்பட்டது முதல் பல்வேறு செயலிகள் டிக்டாக் இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் செலுத்தி வருகின்றன.

டிக்டாக் போன்ற அம்சங்கள் நிறைந்த பல்வேறு செயலிகள் அவ்வப்போது டிரெண்டிங் தலைப்புகளில் தோன்றி மறைகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் டிங்டாங் எனும் செயலி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜூன் 29 முதல் ஜூலை 8 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய செயலிகளான ஷேர்சாட் மற்றும் ரோபோசோ உள்ளிட்டவை அதிக டவுன்லோட்களை பெற்று இருப்பதாக சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதே வரிசையில் தற்சமயம் டிங்டாங் செயலியும் இணைந்துள்ளது.

டிங்டாங் செயலி திடீரென டிரெண்டிங்கில் முதன்மை இடத்தை பிடித்தது. டிங்டாங் செயலியை ஜெராக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலி இதுவரை ஆயிரத்திற்கும் அதிக டவுன்லோட்களும், ஒட்டுமொத்தமாக 4.2 ரேட்டிங் பெற்று இருக்கிறது.