ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ரூ. 7500 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்

ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரிவாக்க பணிகளை ஒட்டி ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ. 7516 கோடிகளை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

விரிவாக்க பணிகள் நிறைவுற மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் இது முழுமைபெற்று ஆலை திறக்கப்படும் போது 6 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை சீனாவில் இருந்து படிப்படியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக சர்ச்சை காரணமாக ஐபோன் உற்பத்திக்கு சீனாவை சார்ந்து இருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள ஆப்பிள் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

தற்சமயம் ஃபாக்ஸ்கான் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் ஐபோன் XR உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய விரிவாக்க பணிகளை தொடர்ந்து எதிர்காலத்தில் மற்ற ஐபோன்களின் உற்பத்தியும் இங்கு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர பிரதேச மாநிலத்திலும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனி ஆலையில் சியோமி மற்றும் இதர நிறுவனங்களுக்கு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வழங்குகிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்வதற்கான முதலீடு பற்றி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

பலகட்டங்களில் நடைபெறும் இந்த திட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வழங்கும் சலுகைகளின் மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி வரையிலான சலுகைகளை பெற முடியும்.