அதிவேக டேட்டா வழங்கும் போக்கை கைவிடுங்கள் – ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு

இந்தியாவில் சில பயனர்களுக்கு மட்டும் அதிவேக இணைய வசதி வழங்கும் தேர்வு செய்யப்பட்ட சலுகைகள் வழங்குவதை நிறுத்த பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அதிக விலை கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா வழங்கும்பட்சத்தில், மற்ற சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு எந்த விதத்தில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என டிராய் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்த ஏர்டெல் செய்தி தொடர்பாளர், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த நெட்வொர்க் மற்றும் சேவை அனுபவத்தை வழங்க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என தெரிவித்தார்.

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது பிளாட்டினம் மொபைல் வாடிக்கையாளர்கள், ரூ. 499 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தும் போஸ்ட்பெயிட் இணைப்புகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தது.

அதன்படி பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கு மற்ற வாடிக்கையாளர்களை விட அதிக முன்னுரிமை வழங்கப்படும். இந்த விவகாரத்தில் ஏர்டெல் நிறுவனம் பதில் அளிக்க டிராய் ஏழு நாட்கள் காலஅவகாசம் வழங்கி உள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ரெட்எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகையில் மற்ற சலுகையை விட 50 சதவீதம் வேகமான டேட்டா வழங்கப்படுகிறது.