ஆன்லைனில் இலவசமாக பாடம் நடத்தும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் இலவசமாக கோடிங் பாடம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் “Develop in Swift” மற்றும் “Everyone Can Code” பேனர்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் புதிய திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் கணினி அறிவியல் கல்வியாளர்களுக்கான தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியும். புதிய பாடத்திட்டத்தின் மூலம் கல்வியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஓபன் சோர்ஸ் புரோகிராமிங் லேங்குவேஜான ஸ்விஃப்ட் கொண்டு செயலிகளை உருவக்கும் முறை பற்றிய அடிப்படையை அறிந்து கொள்ள முடியும்.

ஆன்லைன் வகுப்பில் “Everyone Can Code” கோடிங் அறியாமல் இருந்தவர்களுக்கானது ஆகும். அந்த வகையில், இதை தேர்வு செய்வோர் கோடிங் பற்றிய விவரங்களை துவக்கத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியும். “Develop in Swift” ஏற்கனவே கோடிங் அறிந்தவர்களுக்கானது ஆகும்.

ஆப்பிள் நிறுவனம் “Develop in Swift” பிரிவில் நான்கு புத்தகங்களை வழங்குகிறது. இவை விரைவில் ஆப்பிள் புக்ஸ் பகுதியில் சேர்க்கப்பட இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைன் கல்விமுறை தற்சமயம் அதிகரித்து வருகிறது.