பலூன் மூலம் இணைய சேவை வழங்க துவங்கிய ஆல்ஃபபெட் நிறுவனத்தின் லூன்

ஆல்ஃபபெட் நிறுவனத்தின் லூன் நிறுவனம் வர்த்தக முறையில் பலூன் மூலம் இணைய சேவையை வழங்க துவங்கி உள்ளது. நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக வர்த்தக முறையில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

பலூன் மூலம் இணைய சேவையை பெறும் முதல் நாடாக கென்யா இருக்கிறது. இதனை செயல்படுத்த ஆல்ஃபபெட் நிறுவனம் டெல்காம் கென்யாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது.

கென்யாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர்களுக்கு லூன் பலூன் இணைய சேவை மூலம் இண்டர்நெட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் மொசாம்பிக் பகுதிகளிலும் பலூன் சார்ந்த இணைய சேவையை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

உலகம் முழுக்க முற்றிலும் இணைய வசதி இல்லாத பகுதிகளில் இண்டர்நெட் இணைப்பு வழங்க லூன் திட்டமிட்டு இருப்பதாக லூன் நிறுவன தலைமை செயல் அதிகாரி அலஸ்டெர் வெஸ்ட்கிராத் தெரிவித்தார்.

பலூன்கள் புவியின் அடுக்கு மண்டலத்தில் நிலை நிறுத்தப்பட்டு மேம்பட்ட மெஷின் லேர்னிங் வழிமுறைகளால் நகர்த்தப்பட்டு கீழே உள்ள பகுதிகளில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான சோதனைகளின் போது 18.9Mbps டவுன்லோட் வேகமும், 4.74Mbps அப்லோட் வேகம் வழங்கி இருக்கிறது.