டிக்டாக் பெயரில் வைரலாகும் மால்வேர் செயலி

டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு இந்திய செயலிகள் பிரபலமாகி வருகின்றன. டிக்டாக் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு போலி டிக்டாக் செயலிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் டிக்டாக் ப்ரோ பயனர்களை ஏமாற்றி வருகிறது.

ஹேக்கர்கள் டிக்டாக் ப்ரோ எனும் செயலியை பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மற்றும் SMS மூலம் அனுப்பி, இதனை டவுன்லோட் செய்ய கோரி வருகின்றனர். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், ஹேக்கர்கள் போலி செயலிகளின் டவுன்லோட்களை அதிகரித்துக் கொள்ள இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ்அப் மற்றும் SMS தளங்களில் பயனர்களுக்கு வரும் இதுபோன்ற குறுந்தகவல்கள் போலியானவை ஆகும். பயனர்களை டவுன்லோட் செய்யக் கோரும் டிக்டாக் ப்ரோ செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் செயலியின் ரீபிராண்டு செய்யப்பட்ட வடிவம் என கூறப்படுகிறது.

பயனர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்களில், “Enjoy Tiktok Videos and also make Create Videos again. Now TikTok is only Available in (TikTok pro) So Download from below,” போன்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிக்டாக் ப்ரோ ஏபிகே (APK) ஃபைல் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பரப்பப்படும் இணைய முகவரிகள் தீங்கு விளைவிக்கும் தகவல் நிறைந்தவை ஆகும். இவ்வாறு டவுன்லோட் செய்தவர்கள் வழங்கிய விவரங்களின் படி இந்த செயலியில் உண்மையான டிக்டாக் லோகோ போன்ற ஐகான் காணப்படுகிறது. செயலி இன்ஸ்டால் ஆகும் போது, போனின் கேமரா, மைக் போன்ற விவரங்களை இயக்க அனுமதி கோருகிறது.

கேட்கப்படும் அனுமதி வழங்கப்பட்டதும், செயலி போனில் அப்படியே இருக்கிறது. பெரும்பாலும் செயலியின் பின்புறம் மால்வேர் இருக்கும் என கூறப்படுகிறது. போலி செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை. இதை கொண்டே இந்த செயலி போலியானது என அறிந்து கொள்ள முடியும்.