வகுப்பறையில் யானை – ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கொண்டு பாடம் எடுத்து அசத்தும் கேரள பள்ளி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பெரும்பான்மை பணிகள் மற்றும் சேவைகள் வீட்டில் இருந்து நடைபெற்று கொண்டு வருகிறது.

இண்டர்நெட் உதவி கொண்டு மக்கள் அவரவர் அலுவல் பணிகளை வீட்டில் இருந்து மேற்கொள்ளும் முறை தற்சமயம் பழக்கமாகி விட்டது. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி என கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்களை நடத்த துவங்கி விட்டன.

ஆன்லைன் கல்வி முறையே வித்தியாசமாக துவங்கியுள்ள நிலையில், கேரளாவில் இயங்கி வரும் பள்ளி ஆன்லைன் கல்வி முறையில் புதுமையை கையாண்டு வருகிறது. பாடம் எடுக்கும் போதே, மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்க, ஆசிரியர் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்.

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்டு யானை, மாடு போன்ற விலங்குகள் பள்ளி வகுப்பறையில் நிற்பது மற்றும் அசைவது போன்ற காட்சிகளை மாணவர்களுக்கு ஆசிரியர் காண்பிக்கிறார். இவ்வாறு செய்வதால் மாணவர்கள் எளிதில் பாடத்தை புரிந்து கொள்ள முடியும்.

இணையத்தில் இதுபற்றிய செய்திகள் வெளியாக துவங்கியது முதல் பல பிரபலங்கள் இந்த புது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.