ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் ஸ்மார்ட் முகக்கவசம் கண்டுபிடிப்பு

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா பாதிப்பு தொடர் கதையாகியுள்ள நிலையில், மக்கள் புதிய வைரஸ் பாதிப்புடன் வாழ பழக்கப்படுத்திக் கொள்ள துவங்கிவிட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது மட்டுமே நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வழி செய்யும். இந்த சமயத்தை சரியாக புரிந்து கொண்ட ஜப்பான் நாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று புதுவித முகக்கவசம் ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது.

கனெக்ட்டெட் மாஸ்க் என அழைக்கப்படும் இந்த முகக்கவசம் இண்டர்நெட் இணைப்பு வசதி கொண்டது ஆகும். இந்த ஸ்மார்ட் மாஸ்க் குறுந்தகவல் அனுப்புவது, ஜப்பான் மொழியை எட்டு வெவ்வேறு மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வது மற்றும் அழைப்புகளை மேற்கொள்வது போன்ற அம்சங்களை கொண்டது ஆகும்.

டோனட் ரோபோடிக்ஸ் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய முகக்கவசக்கை சி மாஸ்க் என அழைக்கிறது. வைட் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசம் ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்டிருக்கிறது. இதனால் இந்த முகக்கவசம் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.

மேலும் இதில் உள்ள செயலி பயனர் பேசுவதை அப்படியே வார்த்தைகளாக மாற்றும் திறன் கொண்டிருக்கிறது. புதுவித சி மாஸ்க்கினை பயனர்கள் வழக்கமாக அணிந்து கொள்ளும் முகக்கவசத்தின் மேல் அணிந்து கொள்ள முடியும்.

புதிய முகக்கவசத்தின் விலை 40 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3025 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த முகக்கவசம் ஜப்பானில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது. அதன்பின் இந்த முகக்கவசங்கள் சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளிலும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.