ஒரு வருடத்திற்குள் 25 கோடி டவுன்லோட்களை கடந்த Call of Duty: Mobile கேம்

சந்தையில் வெளியான ஒரு வருடத்திற்குள் Call of Duty: Mobile கேம் உலகம் முழுக்க சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. இதனை சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தனை டவுன்லோட்களில் மொபைல் கேமின் அனைத்து பதிப்புகள், ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Call of Duty: Mobile கேம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் அதிக பிரபலமாகி உள்ளது.

உலகிலேயே இந்த இரு நாடுகளில் தான் இந்த கேம் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கிறது என சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் அமெரிக்கா மட்டும் 18 சதவீதம் பங்கு வகிக்கிறது. இதே காலக்கட்டத்தில் PUBG Mobile கேமினை சுமார் 23.6 கோடி பேரும், Fortnite கேமினை சுமார் 7.8 கோடி பேரும் டவுன்லோட் செய்துள்ளனர்.

இவற்றிலும் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டவுன்லோட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. Call of Duty: Mobile கேம் அதிகபட்ச டவுன்லோட்கள் அமெரிக்காவில் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இதனை அதிகம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.

சென்சார் டவர் விவரங்களின்படி Call of Duty: Mobile கேமில் பயனர்கள் செலவிட்ட தொகை மூலம் இந்த கேம் ரூ. 2470 கோடி வருவாய் ஈட்டியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்க PUBG ஈட்டிய தொகையை விட 78 சதவீதம் அதிகம் ஆகும்.

டென்சென்ட் நிறுவனம் Call of Duty: Mobile கேமினை கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்தது. அறிமுகமான முதல் இரண்டு மாதங்களில் இதனை சுமார் 17.2 கோடி பேர் டவுன்லோட் செய்திருந்தனர்.