ரூ. 20 ஆயிரம் விலையில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் சற்றே குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இசட் பெயரில் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறியப்படாத நிலையில், ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய் புதிய ஸ்மார்ட்போன் விலை விவரங்களை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். கால் பெய் தனது ட்விட்டரில், 2014 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட்போனின் ட்விட்டர் பதிவை ரீட்விட் செய்திருக்கிறார்.

அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 22779 முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். 2014 இல் வெளியான ஒன்பிளஸ் ஒன் இந்தியாவில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் புதிய ஒன்பிளஸ் இசட் வெளியீட்டு தேதி மற்றும் விலை அறிவிக்கப்படவில்லை.

எனினும், இது ஒன்பிளஸ் ஒன் போன்ற துவக்க விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 inch Super AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர 64MP+16MP+2MP கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300mAh பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.