சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்11 சீரிஸ்: கேலக்ஸி எஸ்11, கேலக்ஸி எஸ்11 பிளஸ், கேலக்ஸி எஸ்11இ ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இவற்றில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

சாம்சங் வழக்கப்படி புதிய கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2020) நிகழ்வுக்கு முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 18, 2020 தேதியில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனினும், இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் அறிமுகமாகிவிடும். அடுத்த ஆண்டு சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரைமரி கேமரா, 5x டெலிபோட்டோ லென்ஸ், அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 3D டைம் ஆஃப் ஃபிளைட் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.9 இன்ச் வளைந்த டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

Photo Courtesy: OnLeaksx@Pricebaba