அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் ஐடியா

டெலிகாம் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களின் விலையை சில தினங்களுக்கு முன் உயர்த்தின. விலை உயர்வின் அங்கமாக டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவன எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு கட்டணம் நிர்ணயித்தன.

பெரும்பான்மையான முன்னணி நிறுவனங்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு கட்டணம் விதித்ததற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகை என்ற பெயரில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குவதாக அறிவித்தது.

Vodafone-Free

தற்சமயம் ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் வோடபோன் ஐடியா அறிவித்த புதிய அன்லிமிட்டெட் சலுகைகள் முறையே 28 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கின்றன. விலை உயர்வின் படி அன்லிமிட்டெட் சலுகைகளுக்கான துவக்க கட்டணம் ரூ. 149 இல் துவங்கி ரூ. 399 வரை நிர்ணயம் செய்யப்பட்டன. இச்சலுகைகளின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகளின் விலை ரூ. 374 இல் துவங்கி ரூ. 699 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர சலுகைகளின் (365 நாட்கள்) விலை ரூ. 1,499 மற்றும் ரூ. 2399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.