கூகுள் மட்டுமின்றி ஆல்ஃபாபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை

அமெரிக்காவை சேர்ந்த, கூகுள் நிறுவனம் தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக அக்டோர் 2, 2015-இல் ஆல்ஃபாபெட் உருவாக்கப்பட்டது. கூகுள் நிறுவன பணிகள் பிரிக்கப்பட்டு ஆல்ஃபாபெட் நிறுவனம் தனியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூகுள் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை இனி ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என கூகுள் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவரும் கூட்டாக இந்த அறிவிப்பினை வெளியிட்டனர். அதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் அதன் துணை நிறுவனமான ‘ஆல்ஃபாபெட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கூடுதலாக சுந்தர் பிச்சை கவனிப்பார் என்று கூறியுள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தனது கடின உழைப்பால் கூகுள் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த சுந்தர் பிச்சை, தற்தமயம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் நிர்வாக பொறுப்பை கூடுதலாக கவனிக்க இருக்கிறார்.

கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரைன் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் தொடர்ந்து செயல்பட்டு, நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்குவர்.