மூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் – விற்பனையில் அசத்தும் ரெட்மி நோட் 8 சீரிஸ்

சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. பின் இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாத வாக்கில் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் மட்டும் ஒரே மாதத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்து இருந்தது.

புதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில், சீனாவில் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடலை 100 யுவான் விலை குறைத்து 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 13,250) விலையில் விற்பனை செய்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 8 விலை ரூ. 12,999 முதல் துவங்குகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமராவும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. + 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என நான்கு பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.