ஸ்மார்ட்போன் பேட்டரியை 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் சியோமி தொழில்நுட்பம்

சியோமி நிறுவனம் 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போ வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் சாதனங்களில் வழங்கப்படும் என சியோமி அறிவித்துள்ளது. 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் மாடல் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

சீன சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் படி சியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் சியோமியின் டெவலப்பர்கள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டதாகவும், இது அடுத்த ஆண்டு வெளியாகும் சாதனங்களில் வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும். சியோமி தவிர விவோ நிறுவனமும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஏற்கனவே அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 13 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்துவிடும்.

முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், சியோமி மற்றும் விவோ நிறுவனங்கள் தங்களின் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இதுவரை வணிக ரீதியில் வெளியிடவில்லை. சியோமி போன்று விவோ நிறுவனமும் தனது 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு வெளியிடலாம்.

இத்துடன் சியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பெறும் முதல் ஸமார்ட்போன் மாடலாக Mi மிக்ஸ் 4 இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. சியோமி நிறுவனம் அடுத்த மாதம் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை துளை கொண்ட பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.