ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயர்த்தப்படுகிறது

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவும் தனது சேவை கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி வரும் வாரங்களில் சேவை கட்டண உயர்வு அமலாக்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

விலை உயர்வு வாடிக்கையாளர்களின் டேட்டா பயன்பாடு, டிஜிட்டல்மய பயன்பாட்டு வளர்ச்சியை மற்றும் தொடர் முதலீடுகளை எந்த விதத்திலும் பாதிக்காது என ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்களை போன்றே அரசாங்கத்துடன் இணைந்து துறையை வலிமைப்படுத்தி, இந்திய வாடிக்கையாளர்களுக்கு பலனளிக்க பணியாற்றுவோம். மேலும் டேட்டா பயன்பாடு, டிஜிட்டல்மய பயன்பாடு, முதலீடுகளை பாதிக்காத வகையில் சேவை கட்டண விலை உயர்வை அடுத்த சில வாரங்களில் சாத்தியப்படுத்த டிராயுடன் பணியாற்றி வருகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோவும் சேவை கட்டணத்தை உயர்த்தும் பட்சத்தில், டெலிகாம் துறையில் மீண்டும் கட்டண போட்டி சூடுபிடிக்க துவங்கிவிடும். ஏற்கனவே வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணங்களை டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளன.

செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த இழப்பு ரூ. 74,000 கோடி என அறிவித்தன.