வோடபோன் போன்று ஏர்டெல் கட்டணமும் உயர்கிறது

இந்திய டெலிகாம் துறையில் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி சூழல் காரணமாக வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவை கட்டணங்களை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், வோடபோன் ஐடியா போன்று ஏர்டெல் நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. எனினும், சேவை கட்டணங்கள் எத்தனை சதவிகிதம் வரை உயரும் என்பது பற்றி இருநிறுவனங்களும் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை.

“டெலிகாம் துறையில் வேகமாக வளரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பதால், தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த துறை டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் முயற்சிகளை ஆதரிப்பது முக்கியமான ஒன்றாகும்,” என பாரதி ஏர்டெல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த இழப்பு ரூ. 74,000 கோடி என அறிவிக்கப்பட்டது.