வோடபோன் ஐடியா சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படுகிறது

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவைகளுக்கான கட்டணத்தை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டெலிகாம் துறையில் அந்நிறுவனம் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக விலை உயர்வு பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை உயர்வு பற்றி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சேவை கட்டணம் எத்தனை சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றும் முயற்சிகளில் இந்நிறுவனம் தொடர்ந்து இந்தியா முழுக்க சீரான மொபைல் சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக வோடபோன் நிறுவனம் இந்திய வியாபாரத்தை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இவற்றை வோடபோன் கடந்த வாரம் பொய் என கூறி, இந்திய சந்தையை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தது.

“உலக சந்தையில் ஒப்பிடும் போது இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணம் மிகவும் குறைவு ஆகும். இந்தியாவில் மொபைல் டேட்டா சேவைக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெலிகாம் துறையில் ஏற்பட்டு இருக்கும் நிதி நெருக்கடி சூழலை பங்குதாரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்கலாமா என பரிசீலனை செய்து வருகிறது,” என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.

“வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்க, வோடபோன் ஐடியா தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சேவைகளை துவங்கி 30 கோடி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம்,” என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.