டிக்டாக் செயலியில் ரகசிய கணக்கு வைத்திருக்கும் மார்க் சூக்கர்பர்க்

இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் எனும் அம்சம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் சிறிய வீடியோக்களை உருவாக்கி அவற்றை தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்க் டிக்டாக் செயலியில் ரகசிய அக்கவுண்ட் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அக்கவுண்ட் வெரிஃபை செய்யப்படவில்லை என்றாலும், இதில் @finkd எனும் பெயரில் இயங்குகிறது.

மார்க் சூக்கர்பர்க் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டையும் @finkd பெயரில் பயன்படுத்தி வருகிறார். டிக்டாக்கில் இந்த கணக்கினை சுமார் 4000 பேர் பின்தொடர்கின்றனர். இந்த கணக்கு அரியானா கிராண்ட், சலீனா கோமெஸ் என சில நட்சத்திரங்களை பின்தொடர்கிறது. 2016 ஆம் ஆண்டு மார்க் சூக்கர்பர்க் மியசிக்கல்.லி இணை நிறுவனர் அலெக்ஸ் சூவை ஃபேஸ்புக்கின் மென்லோ பார்க் தலைமையகத்தில் சந்தித்து பேசினார். எனினும், சந்திப்பு பற்றி அதன்பின் எவ்வித தகவலும் இல்லை.

இதன்பின் 2017 ஆம் ஆண்டு சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனம் மியூசிக்கல்.லியை சுமார் 80 கோடி டாலர்களுக்கு வாங்கி, சேவையை மற்றொரு செயலியுடன் இணைத்து டிக்டாக் என மாற்றியது. தற்சமயம் டிக்டாக் செயலியை உலகம் முழுக்க சுமார் 80 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் டிக்டாக் செயலி இன்ஸ்டாகிராமை விட அதிக பிரபலமாகி விட்டது என மார்க் சூக்கர்பர்க் சமீபத்தில் தெரிவித்தார். இந்திய சந்தையில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களுக்கு டிக்டாக் கடும் போட்டியாக இருக்கிறது. இதனால் டிக்டாக் 100 கோடி டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இவைதவிர ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லஸ்ஸோ எனும் செயலியை டிக்டாக்கிற்கு போட்டியாக அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.