6ஜி சேவைக்கான பணிகளை துவங்கிய சீனா

உலகில் 5ஜி சேவை வழங்கும் பணிகள் துவக்க கட்டத்தில் இருக்கும் நிலையில், சீனா 6ஜி சேவைக்கான பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் 5ஜி சேவை வழங்க துவங்கி இன்னும் ஒரு மாதம் முழுபெறவில்லை. இந்நிலையில் 6ஜி சேவைக்கான துவக்க பணிகளில் சீனா ஈடுபட துவங்கி விட்டது.

சீனா, கொரியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா என சில நாடுகளில் மட்டும் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கவதற்கான பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளது. 5ஜி சேவையை முழுமையாக பயன்படுத்த வல்லுநர்கள் திணறும் நிலையில் சீனா 6ஜி சேவைக்கான தொழில்நுட்ப ஆய்வுகளை துவங்கியுள்ளது.

சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 6ஜி சேவைக்கான துவக்க பணிகளை கவனிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசு வல்லுநர்கள் அடங்கிய முதல் குழு 6ஜி சேவைக்கான பயன்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இரண்டாவது குழு 37 பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து ஆய்வாளர்கள் இடம்பெற்று இருக்கின்றனர். இந்த குழு 6ஜி சேவைக்கான தொழில்நுட்ப பிரிவில் ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை வழங்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் ஹூவாய் நிறுவனம் 6ஜி சேவைக்கான பணிகளை துவங்கிவிட்டதாக அறிவித்தது. எனினும், இது வெறும் துவக்க பணிகள் தான் என்பதால் 6ஜி வணிக மயம் பெற இன்னும் நீண்ட காலம் ஆகும்.