ரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி

இந்தியாவில் ரெட்மியின் ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் சீரிஸ் ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்கள் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகமாகும் என ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதே நாளில் சியோமி தனது Mi பாப் 2019 நிகழ்வினை நடத்த இருக்கிறது. இந்நிகழ்வு இந்தியாவில் சியோமியின் ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாட நடத்தப்படுகிறது.

தற்சமயம் புதிய ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் இந்திய விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இவற்றின் விலை சீன சந்தையில் நிர்ணயிக்கப்பட்டதை போன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன சந்தையில் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே மாதத்தில் அறிமுகமானது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 124.8 டிகிரி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, சஃபையர் லென்ஸ் கவர் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஏழாம் தலைமுறை ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3P லென்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் கைரேகை இயங்கும் பகுதி 15 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 3D வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.