பரிமாரிப்பு பணிகளில் தவிர்க்க முடியாத பிழை ஏற்பட்டு விட்டது – பயனர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகள் மீண்டும் முழுவீச்சில் இயங்குவதாக அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது.

ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளமான DownDetector ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதை நேற்று கண்டறிந்து தெரிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் சம்மந்தப்பட்ட தளங்களில் பயனர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

‘எங்களது சேவைகள், செயலிகள் மற்றும் தளங்களில் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டதாக பலரும் குற்றஞ்சாட்டினர். இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டது. அனைத்து சேவைகளும் மீண்டும் 100 சதவிகிதம் சீராக இயங்கும். சேவைகளில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’, என ஃபேஸ்புக் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

சேவைகளிடையே வழக்கமான பரமாரிப்பு பணிகள் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தவிர்க்க முடியாத பிழை காரணமாகவே சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது என ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.