ஜியோவை எதிர்கொள்ள கேஷ்பேக் சலுகையுடன் கிடைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனம்

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவசாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்பாட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் ஏர்டெல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களை புதிய கேஷ்பேக் அறிவிப்பு கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் அறிவித்திருக்கும் ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை பெறுவது எப்படி?

ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் முதலில் ரூ. 2000 கொடுத்து 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்க வேண்டும். 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கியதும் ரூ. 399 அல்லது ரூ. 499 சலுகையில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் ரூ. 300 ஆக்டிவேஷன் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

சாதனத்தை வாங்கி ஆக்டிவேட் மற்றும் ரீசார்ஜ் செய்ததும் இரண்டில் ஒரு சலுகையை ரீசார்ஜ் செய்ததும், ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம். கேஷ்பேக் தொகை போஸ்ட்பெயிட் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இதனை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் கட்டணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு மாதம் 50 ஜி.பி. டேட்டாவும், இரண்டாவது சலுகையில் பயனர்களுக்கு மாதம் 75 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் போது ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம். ரூ. 499 சலுகை நாடு முழுக்க அனைவருக்கும் கிடைக்கும் நிலையில் ரூ. 399 சலுகை சில வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது.