வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் புதிய ஷார்ட்கட்

வாட்ஸ்அப் செயலியில் வழங்க பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது, காண்டாக்ட் ரேங்கிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் முந்தைய வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் காணப்பட்டன.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் கியூ.ஆர். கோட் ஸ்கேனர் வசதி வழங்குவதற்கான சோதனைகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக இதே அம்சம் சோதனை செய்யப்படுவதாக இந்த ஆண்டு மே மாதத்திலும் தகவல் வெளியானது. புதிய கியூ.ஆர். கோட் ஸ்கேனர் மூலம் பயனர்கள் அவரவர் காண்டாக்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.19.189 பதிப்பில் வழங்கப்படுகிறது.

எனினும், இந்த அம்சம் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் யூசர்நேம் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் கியூ.ஆர். கோட் அம்சங்களை போன்று புதிய அம்சம் இயங்கும் என கூறப்படுகிறது.

புதிய அம்சம் ஷார்ட்கட் முறையில் வழங்கப்படுகிறது. பயனர்கள் இதனை க்ளிக் செய்து ஸ்கேன் மற்றும் ஷேர் செய்ய துவங்கலாம். முன்னதாக வெளியான தகவல்களில் வாட்ஸ்அப் கியூ.ஆர். கோட் உறுதி செய்யப்பட்டதும், செயலி காண்டாக்ட் விவரங்களை தானாக பதிவு செய்யத் துவங்கும் என கூறப்பட்டது. இதுதவிர கியூ.ஆர். கோடை திரும்பப்பெறும் வசதியும் வழங்கப்படும் என தெரிகிறது.