அமேசான் தளத்தில் நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த எல்.ஜி. ஸ்மார்ட்போன்

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று துவங்கியது. முதற்கட்டமாக எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ 30 ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களும் முதல் விற்பனை துவங்கிய 12 நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்ததாக எல்.ஜி. அறிவித்துள்ளது.

எனினும் 12 நிமிடங்களில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின என்பதை எல்.ஜி. அறிவிக்கவில்லை. எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ30 ஸ்மார்ட்போன்களின் இரண்டவாது விற்பனை ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

எல்.ஜி. டபுள்யூ சீரிசில் டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ30 ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமான எல்.ஜி. டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கின்றன.
சிறப்பம்சங்களை பொருத்தவரை எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ 30 ஸ்மார்ட்போன்களில் முறையே 6.19 இன்ச் மற்றும் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் விஷன் நாட்ச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.