ஜிமெயிலில் டைனமிக் இ-மெயில் அம்சம் வழங்கப்படுகிறது

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில், டைனமிக் இ-மெயில் (Dynamic email) எனும் அம்சத்தை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. புதிய அம்சம் 15 நாட்களுக்குள் அனைவருக்கும் வழங்கப்படும்.

ஜிமெயில் டெஸ்க்டாப் வெர்ஷன் பயன்படுத்தும் ஜி சூட் பயனர்களுக்கு இந்த அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. டைனமிக் இ-மெயில் அம்சம் மூலம் பயனர்கள் பல்வேறு சேவைகளை புதிய டேப் ஒன்றிற்கு செல்லாமலேயே மேற்கொள்ள வழிசெய்கிறது. அதன்படி பயனர்கள் ஈவென்ட் இன்வைட், கேட்டலாக் பிரவுசிங் போன்ற அம்சங்களை புதிய டேபை திறக்காமலேயே இயக்க முடியும்.

புதிய அம்சம் மூன்றாம் தரப்பு சேவைகளிலும் படிவங்கள் மற்றும் இதர அம்சங்களை இயக்க வழி செய்கிறது. இதற்கு ஜிமெயிலின் AMP பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஜிமெயில் அக்கவுண்ட்டை விட்டு வெளியேறாமல் சேவைகளை இயக்க முடியும். இதை கொண்டு டிக்கெட்களையும் முன்பதிவு செய்ய முடியும்.

இந்த அம்சம் சீராக இயங்க மூன்றாம் தரப்பு சேவை வழங்குவோரை கூகுள் அங்கீகரித்திருக்க வேண்டும். கூகுள் அங்கீகரித்த பின்தான் இந்த சேவைகளை ஜிமெயிலில் இயக்க முடியும். இந்த அம்சத்தை இயக்க வேண்டாம் என்போர், கூகுள் அட்மின் கன்சோல் சென்று இதனை செயலிழக்கச் செய்யலாம்.