உலகம் முழுக்க ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள சேவைகளை மீண்டும் சீராக இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பயனர்களால் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் சேவை சீராக இயங்கவில்லை என சுமார் 14,000 பேரும், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளும் சீராக இயங்கவில்லை என ஆயிரக்கணக்கானோரும் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர். ஃபேஸ்புக் நிறுவன சேவைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகளவு பாதிக்கப்படிருப்பதாக Downdetector.com எனும் வலைதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னதாக மார்ச் மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவன சேவைகள் உலகம் முழுக்க நீண்ட நேரத்திற்கு தடைப்பட்டது. பயனர்களால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளை சுமார் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.