பழைய விலையில் கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் தனது நீண்ட வேலிடிட்டி வழங்கும் பிரீபெயிட் சலுகையின் பலன்களை மாற்றியமைத்துள்ளது. ரூ. 1699 விலையில் கிடைக்கும் ஏர்டெல் சலுகையில் தற்சமயம் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இது முன்னதாக வழங்கப்பட்ட 1 ஜி.பி. டேட்டாவை விட 400 எம்.பி. அதிகம் ஆகும்.

தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் பயனர்கள் தொடர்ந்து அதிவேக டேட்டா பயன்படுத்த ஒரு எம்.பி. டேட்டாவுக்கு 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். ஏர்டெல் ரூ. 1699 சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதனால் பயனர்களுக்கு மொத்தம் 511 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

இச்சலுகையில் டேட்டா மட்டுமின்றி பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. இத்துடன் HOOQ, ZEE5 மற்றும் ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த சந்தாவில் பயனர்கள் 350-க்கும் அதிக நேரலை தொலைகாட்சி சேனல்கள், 10,000-க்கும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்கலாம். இதுதவிர ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சந்தாவும் வழங்கப்படுகிறது.

ஒருவருட சலுகை வழங்கும் இதர நிறுவனங்கள்:

வோடபோன் நிறுவனம் ரூ. 999 மற்றும் ரூ. 1,699 விலையில் வருடாந்திர சலுகையை வழங்கி வருகிறது. இதில் ரூ. 1699 சலுகை ஏர்டெல் சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது.

ரூ. 999 விலையில் கிடைக்கும் மற்றொரு சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 12 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டேட்டா அளவை கடந்ததும் கூடுதல் டேட்டாவிற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 1,699 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா அளவு கடந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது.