விரைவில் இந்தியா வரும் சுழலும் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் சுழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் இந்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்வதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்திய சந்தையில் வெற்றி பெற்றால், சர்வதேச சந்தையில் நிச்சயம் வெற்றி பெற முடியும். இந்தியர்களுக்கு தொழில்நுட்பம் அதிகம் பிடிக்கும் என சாம்சங் எலெக்டிராணிக்ஸ் நிறுவனத்தின் இயோன் ஜியோங் கிம் தெரிவித்தார்.

சாம்சங் நிறுவனம் எழுபது நாட்களில் சுமார் ஐம்பது லட்சம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது. இதுவரை சாம்சங் நிறுவனம் ஆறு கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் சாம்சங் தனது கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம் சீரிஸ் போன்று ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்படாமல், ஆஃப்லைன் விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்படும்.

சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 8 எம்.பி. 123-டிகிரி அல்ட்ரா-வைடு சுழலும் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது. சுழலும் கேமரா அமைப்பில் மூன்று கேமரா சென்சார்களின் அனுபவம் இருபுறங்களில் பயன்படுத்தும் போதும் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 2400×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அட்ரினோ 618 GPU வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. இயங்குதளம், 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.