வெங்காயம் மற்றும் பூண்டு நிறம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு

ரியல்மி பிராண்டு பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை உணர்த்த ரியல்மி புதிய எக்ஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது.

ரியல்மி பிராண்டு தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத், இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியதோடு வெங்காயம் மற்றும் பூண்டு நிறம் கொண்ட மாஸ்டர் எடிஷன்களும் இந்தியாவில் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ரியல்மி எக்ஸ் லைட் எனும் பெயரில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. சீன அறிமுக நிகழ்விலேயே ரியல்மி எக்ஸ் இந்திய வெளியீட்டையும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது.

இதுதவிர இந்திய சந்தையில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 18,000 முதல் ரூ. 20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்றும் மாதவ் சேத் தெரிவித்திருந்தார். சீனாவில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன்: 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எட்ஜ்-டு-எட்ஜ் 2340×1080 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. சோனி IMX471 சென்சார் கொண்ட பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. எனினும், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனினை சக்தியூட்ட 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த கலர் ஒ.எஸ். ஸ்கின் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.