பப்ஜி விளையாட பிடிக்குமா? போட்டியில் கலந்து கொண்டு ரூ. 1.5 கோடி வெல்லுங்கள்

டென்சென்ட் கேம்ஸ் மற்றும் பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் பப்ஜி மொபைல் இந்தியா டூர் 2019 போட்டியை அறிவித்துள்ளது. ஒப்போ நிறுவனத்துடன் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ள இப்போட்டியில் இந்தியாவின் தலைசிறந்த பப்ஜி மொபைல் திறமைசாலியை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த நான்கு மாதகங்களில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள http://www.pubgmobile.in/esports/indiatour2019/ வலைதளம் சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு சுமார் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று முதலிடம், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடிப்போருக்கு முறையே ரூ. 50,00,000, ரூ. 20,00,000 மற்றும் ரூ. 10,00,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர விசேஷ பரிசுகளும் வழங்கப்படுகிறது.

போட்டி ஆன்லைன் நிகழ்வுகள் மற்றும் பிராந்திய அளவிலான இறுதிப்போட்டி என இந்தியா முழுக்க நான்கு பாகங்களாக நடைபெற இருக்கிறது. இதன் பிராந்திய அளவிலான இறுதிப்போட்டிகள் ஜெய்ப்பூர், கவுகாத்தி, புனே மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

ஒப்போ பப்ஜி மொபைல் இந்தியா டூர் 2019 எனும் தலைப்பில் இப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் அனைத்து இந்திய குடிமக்களும் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்வோர் பப்ஜி மொபைல் அக்கவுண்ட்டில் டையர் பிளாட்டினம் 5 அல்லது லெவல் 20 கடந்திருக்க வேண்டும். பகுதி வாரியாக கலந்து கொள்ள விரும்பும் பயனர்கள் நான்கு நகரங்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரு குழுவில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எனினும், ஒரு பயனர் ஒருமுறை தான் பதிவு செய்ய முடியும். பதிவு செய்யும் குழுக்களில் ஸ்குவாட் மெம்பர்களும் பிராந்தியங்களின் அடிப்படையில் இருக்க வேண்டுமென எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

ஸ்குவாட் மட்டுமான ஃபார்மேட்டில் போட்டிகள் நான்கு நகரங்களிலும் பல்வேறு கட்டங்களில் நடைபெறும். ஒவ்வொரு கட்டமும் முதல் நபர் – மூன்றாம் நபர் என மோட்களுக்கு ஏற்றவாரு கலந்திருக்கும். இதன்மூலம் அனைத்து பயனர்களும் சமமான அனுபவத்தை பெற முடியும்.

புள்ளிகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஸ்குவாட்கள் இன்-கேம் குவாலிஃபையர் முறையில் முதல் 500 குழுக்கள் ஆன்லைன் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். இதில் இருந்து 20 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு குழுவும் மற்ற குழுக்களுடன் மோதும். இவற்றில் வெற்றி பெறும் குழுக்கள் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் குழுக்கள் இந்திய அளவிலான இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதுதவிர ஆன்லைன் ப்ளே-ஆஃப் சுற்றுகளில் வெளியேறிய முதல் 64 அணிகள் வைல்டு கார்டு சுற்றுகள் மூலம் மற்றொரு வாய்ப்பை பெறுவவர். பின் இதில் இருந்து நான்கு குழுக்கள் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும்.