இந்தியாவில் டாடா ஸ்கை செட் டாப் பாக்ஸ் விலையில் ரூ. 300 குறைப்பு

டாடா ஸ்கை நிறுவனம் இந்தியாவில் தனது செட் டாப் பாஸ் விலையை மீண்டும் குறைத்துள்ளது. டாடா ஸ்கை ஹெச்.டி. மற்றும் எஸ்.டி. என இரு செட் டாப் பாக்ஸ்களின் விலையும் இந்தியாவில் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள டாடா ஸ்கை திட்டமிட்டுள்ளது.

புதிய அறிவிப்பின் படி டாடா ஸ்கை செட் டாப் பாக்ஸ் விலை ரூ. 300 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டாடா ஸ்கை ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் ரூ. 1,499 விலையிலும், எஸ்.டி. செட் டாப் பாக்ஸ் ரூ. 1,399 விலையிலும் கிடைக்கிறது. இது டிஷ் டி.வி. செட் டாப் பாக்ஸ் விலையை விடவும் குறைவாகும்.

முன்னதாக டாடா ஸ்கை ஹெச்.டி செட் டாப் பாக்ஸ் விலை ரூ. 1,800-க்கும், எஸ்.டி. செட் டாப் பாக்ஸ் விலை ரூ. 1,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. புதிய விலை குறைப்பின் மூலம் ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் விலை ரூ. 301 மற்றும் எஸ்.டி. செட் டாப் பாக்ஸ் விலை ரூ. 201 குறைந்திருக்கிறது.

இதுதவிர விலை குறைப்பு காரணமாக ஹெச்.டி. மற்றும் எஸ்.டி. செட் டாப் பாக்ஸ் விலையில் ரூ. 100 மட்டுமே வித்தியாசப்படுகிறது. இதனால் பல வாடிக்கையாளர்கள் ஹெச்.டி. சேவையை தேர்வு செய்ய ஏதுவாக இருக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள புதிய விலை டாடா ஸ்கை வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது.

இதனால் விற்பனையாளர்களிடமும் டாடா ஸ்கை செட் டாப் பாக்ஸ் இதே விலையில் கிடைக்கும்.