ஆப்பிள் அம்சத்தை புதிய பெயரில் அறிமுகம் செய்யும் கூகுள்

கூகுள் நிறுவனம் ஃபாஸ்ட் ஷேர் எனும் அம்சத்தை உருவாக்கி வருகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டிராப் அம்சத்திற்கு போட்டியாக இருக்கும்.

புதிய ஃபாஸ்ட் ஷேர் அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்கள்: ஆண்ட்ராய்டு மற்றும் குரோம்புக்களுடன் ஃபைல்களை பகிர்ந்து கொள்ள முடியும். முன்னதாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் என்.எஃப்.சி. சார்ந்து இயங்கும் ஆண்ட்ராய்டு பீம் அம்சத்தை நீக்கப்போவதாக அறிவித்தது.

கூகுளின் ஆண்ட்ராய்டு பீம் அம்சம் 2011 ஆம் ஆண்டு அறிமுகமான ஆண்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் பதிப்பில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

தற்சமயம் இந்த அம்சத்திற்கு மாற்றாக கூகுள் ஃபாஸ்ட் ஷேர் எனும் சேவையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது ஆப்பிளின் ஏர்டிராப் போன்று இயங்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஃபாஸ்ட் ஷேர் அம்சம் கொண்டு புகைப்படங்கள் மற்றும் இதர ஃபைல்களை இண்டர்நெட் வசதியின்றி மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

புதிய சேவையை பயன்படுத்த ப்ளூடூத் மற்றும் சாதனத்தின் லொகேஷன் அம்சங்களை எனேபிள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் அருகாமையில் இருக்கும் சாதனங்களுடன் தரவுகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவை குரோம்புக், ஆண்ட்ராய்டு சாதனங்கள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஐபோன்களுக்கும் வேலை செய்யும் என தெரிகிறது.

Source: 9to5google