இனி அமெரிக்க நிறுவன பொருட்களை ஹூவாய் வாங்கலாம்

ஹூவாய் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நல்ல செய்தியை தெரிவித்திருக்கிறார். கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

தற்சமயம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார். ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் இந்த தகவலை தெரிவித்தார்.

ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்தித்து வர்த்தக விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாடுகளிடையேயான வர்த்தக விவகாரம் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இருதரப்பும் இணைந்து பொருட்களை விற்பனை செய்வது பற்றி சாதகமான முடிவை எட்டி இருக்கின்றன.

அதன் படி அமெரிக்க நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்திற்கு பொருட்களை விற்பனை செய்ய துவங்கலாம் என டிரம்ப் தெரிவித்தார்.
மே மாதத்தில் அமெரிக்க வர்த்தக துறை ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய்ய தடை விதித்தது. இதனால் கூகுள், குவால்காம், இன்டெல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை ரத்து செய்து கொண்டன.

கூகுள் நிறுவனம் ஹூவாயுடன் வியாபாரம் செய்துவந்த நிலையில், அந்நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஹூவாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஹூவாய் தனது சாதனங்களில் வழங்குவதற்கென சொந்தமாக ஹாங்மெங் ஒ.எஸ். (ஆர்க் ஒ.எஸ்.) உருவாக்கி வருகிறது.