சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஹூவாய் மேட் எக்ஸ்-க்கு முன் வெளியாகும்

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. விற்பனை துவங்கும் முன் கேலக்ஸி ஃபோல்டு மாடல்களில் டிஸ்ப்ளே கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக முன்பதிவு செய்தோருக்கு சாம்சங் முன்பணத்தை திரும்ப வழங்கி, கேலக்ஸி ஃபோல்டு விற்பனையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில், இதன் விற்பனை தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சாம்சங் தனது அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சாம்சங்கின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஹூவாய் மேட்ஸ் போன்று வெளிப்புறமாக மடிக்கும் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. கொரியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் சாம்சங் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் பாகங்களை உற்பத்தி செய்ய துவங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஹூவாயின் மேட் எக்ஸ் மாடலுக்கு முன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக ஜூன் மாதம் வெளியாக இருந்த ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடு பின் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. சாம்சங் போன்று சிக்கல்களை தவிர்க்கவே ஹூவாய் தனது வெளியீட்டு முடிவுகளில் மாற்றங்களை செய்ததாக கூறப்பட்டது.

முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விற்பனை பற்றிய விவரங்கள் வெளியாகாத நிலையில், சாம்சங் தனது இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை ஹூவாய் மேட் எக்ஸ் வெளியாகும் முன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இது ஹூவாய் சாதனத்திற்கு முன்னதாகவே அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான உதிரி பாகங்களை அதிகளவு உற்பத்தி செய்யும் பணிகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங்கின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் வெளிப்புறமாக மடிக்கும் வகையில் உருவாக்கப்படும் என கூறப்பட்டது.