உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.பி. நிறுவனத்தின் புதிய ஓமன் எக்ஸ் 2எஸ் டூயல் ஸ்கிரீன் கொண்ட லேப்டாப் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இன்டெல் நிறுவனத்தின் ட்வின் ரிவர் பிளாட்ஃபார்மை சார்ந்து இயங்கும் முதல் சாதனம் புதிய ஓமன் எக்ஸ் 2எஸ் ஆகும். இத்துடன் ஹெச்.பி. நிறுவனம் ஓமன் 15 மற்றும் பெவிலியன் கேமிங் 15 லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.

ஹெச்.பி. ஓமன் எக்ஸ் 2 எஸ் சிறப்பம்சங்கள்:

மெல்லிய வடிவமைப்பில் மெட்டல் மூலம் உருவாகியிருக்கும் ஓமன் எக்ஸ் 2 எஸ் லேப்டாப் மொத்த எடை 2.35 கிலோ ஆகும். இதில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபுல் ஹெச்.டி. அல்லது 4K பேனல்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இதன் இரண்டாவது டிஸ்ப்ளே கீபோர்டின் மேல்புறத்தில் காணப்படுகிறது. இது 6 இன்ச் அளவில் 1080 பிக்சல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ட்விட்ச், ஸ்பாடிஃபை மற்றும் டிஸ்கார்டு போன்ற செயலிகளுக்கென கஸ்டமைஸ் செய்யப்பட்டிருப்பதாக ஹெச்.பி. தெரிவித்துள்ளது.

இத்துடன் ஹெச்.பி. ஓமன் எக்ஸ் 2 எஸ் மாடலின் டிஸ்ப்ளேவை கமாண்ட் சென்டர் மென்பொருளாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். கேமிங் லேப்டாப்பின் இரண்டாவது டிஸ்ப்ளேவில் ஸ்பாடிஃபை இயக்கும் பட்சத்தில் பெரிய டிஸ்ப்ளேவில் பயனர்கள் கேமிங்கை தொடர முடியும்.

இந்த லேப்டாப் 9 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ9 பிராசஸர், 32 ஜி.பி. ரேம், 2000 ஜி.பி. PCIe NVMe எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் RTX 2070 அல்லது RTX 2080 மற்றும் 8 ஜி.பி. வரை GDDR6 மெமரியை தேர்வு செய்யும் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப்பில் இன்டெல் வைபை 6 வசதி வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது.