இரட்டை டிஸ்ப்ளே கொண்ட நுபியா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

நுபியாவின் இசட்.டி.இ. பிராண்டு இரட்டை டிஸ்ப்ளே கொண்ட நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுகமாகி எட்டு மாதங்கள் கழித்து நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் தற்சமயம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் X50 மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 5ஜி லோகோ டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட்டிற்கு அடுத்து காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான சிறப்பம்சங்களை நுபியா இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், இதில் நுபியா எக்ஸ் 4ஜி வேரியண்ட்டில் வழங்கப்பட்ட அம்சங்களே வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் புதிய 5ஜி வேரியண்ட் விற்பனை விவரங்களும் வெளியாகவில்லை.

முன்னதாக வெளியான நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் பின்புறம் 5.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் AMOLED இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், 24 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பக்காவட்டில் இருபுறங்களிலும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காமின் குவிக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.