இனிமேல் அந்த மாதிரி செய்யக்கூடாது – அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களை சாடிய மத்திய அரசு

அமேசான் மற்றும் வால்மார்ட்டின் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய நேரடி அந்நிய முதலீட்டு விதிகளை சரியாக பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அந்நிய முதலீட்டு விதிகளின் கீழ் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தக முறைகளில் இருந்து சிறு வியாபாரிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே நேரடி அந்நிய முதலீடு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் வியாபாரம் செய்யும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் புதிய நேரடி அந்நிய முதலீட்டு விதிகள் அமலுக்கு வந்தன. இந்த விதிகள் ஆயிரக்கணக்கான சிறு வணிகர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அறிவிக்கப்பட்டன. எனினும், சிறு வணிகர்கள் தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு முதலீடுகள் நிறைந்த பெரும் ஆன்லைன் வர்த்தகர்கள் சூழ்ச்சி நிறைந்த வியாபார தந்திரங்களை கையாள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் எந்த விதிகளையும் மீறவில்லை என தெரிவித்துள்ளன. இரு நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கம் மத்திய அரசின் புதிய நேரடி அந்நிய முதலீட்டு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றில் மாற்றம் செய்ய வலியுறுத்தின.

அமைச்சர் பியூஷ் கோயல் மத்திய அரசின் புதிய நேரடி அந்நிய முதலீட்டு விதிகள் எக்காரணம் கொண்டும் மீறப்படக்கூடாது என தெரிவித்தார். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் சலுகை மற்றும் தள்ளுபடி விதிகள் சிறு வணிகர்களை பாதிப்பதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.