ஆண்ட்ராய்டு கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக பாதுகாப்பு வசதி அறிமுகம்

கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் புதிதாக ஸ்டே சேஃபர் (Stay Safer) எனும் அம்சத்தை வழங்கி வருகிறது. புதிய அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

பொது போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கால் டாக்சி, ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் இதர பொது போக்குவரத்துகளை பயன்படுத்துவோருக்கு பயனளிக்கும் விதமாக இருக்கும்.

இத்துடன் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயனர்கள் பயணிக்கும் இடம் சார்ந்த விவரங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிரப்படும். இந்தியாவில் முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்த கூகுள் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்திருக்க வேண்டும்.

ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்ஸ் செயலியினை அப்டேட் செய்ததும், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை தேடி, அதற்கான வழியை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போதே ஸ்டே சேஃபர் பட்டன் திரையில் தோன்றும். ஸ்டே சேஃபர் பட்டன் ‘கெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ்’ (get off-route alerts) மற்றும் ‘ஷேர் லைவ் ட்ரிப்ஸ்’ (share live trips) என இரு ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

இதில் கெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ் அம்சத்தை க்ளிக் செய்தால், கூகுள் மேப்ஸ் பரிந்துரை செய்த வழியை விட்டு 0.5 கிலோமீட்டர் சென்றதும், பயனருக்கு நோட்டிஃபிகேஷன் வழங்கி எச்சரிக்கை செய்யும். பின் பயனர்கள் பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் இருந்து எத்தனை தூரம் இருக்கின்றனர் என்பதை ஒப்பிட்டு காண்பிக்கும்.

இதேபோன்று ஷேர் லைவ் ட்ரிப் அம்சத்தை க்ளிக் செய்தால், பயனர் செல்லும் இடத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு நேரடியாக பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் கொண்டு பயனர் தனது லொகேஷனை ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ஸ்லேக் உள்ளிட்ட செயலிகளில் பகிர்ந்து கொள்ளலாம்.

புதிய பாதுகாப்பு அம்சம் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.