64 எம்.பி. கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி உலகின் முதல் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத், புதிய ஸ்மார்ட்போனின் டீசரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தனது ட்விட்டர் பதிவில் 64 எம்.பி. கேமராவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, “புதிய பிரீமியம் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறோம். 64 எம்.பி. GW1 1/.172 சென்சார், 1.6µm பிக்சல் கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறோம். இதேபோன்ற புகைப்படங்களை பதிவிட, இந்த ட்விட்டை ரீட்வீட் செய்யுங்கள்.” என தெரிவித்திருக்கிறார்.

Realme-64mp-cam-teaser

மாதவ் சேத் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் கேமரா வாட்டர்மார்க்கை பார்க்கும் போது, இந்த ஸ்மார்ட்போனில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் நான்கு பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய 64 எம்.பி. கேமரா தவிர ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் ரியல்மி நிறுவனம் சாம்சங்கின் புதிய 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சாரை 4 இன் 1 பிக்சல் தொழில்நுட்பத்தில் வழங்கும் என கூறப்படுகிறது. இது 0.8 மைக்ரான் பிக்சல்களை 1.6 மைக்ரான் பிக்சல்களாக மாற்றி, குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளில் 16 எம்.பி. தரத்திலும் அதிக வெளிச்சமுள்ள பகுதிகளில் 64 எம்.பி. தர புகைப்படங்களை வழங்கும் என கூறப்படுகிறது.

ரியல்மியின் புதிய அறிவிப்பு சியோமி சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்.பி. கேமராவுடடன் வெளியான முதல் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருந்தது.