ரூ. 600 கொடுத்து இண்டர்நெட், லேண்ட்லைன், டி.வி. சேவைகளை பயன்படுத்துங்க – அசத்தும் ஜியோ ஜிகாஃபைபர் காம்போ

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ ஜிகாஃபைபர் இணைய சேவைகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த சேவைகளுக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 2018 இல் துவங்கியது. எனினும், ஜியோ ஜிகாஃபைபர் சேவை வணிக ரீதியாக இதுவரை துவங்கப்படவில்லை.

இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் ஜியோ ஜிகாஃபைபர் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் ஜியோ ஜிகாஃபைபர் கட்டண விவரங்களென அடிக்கடி புதிய விலைப்பட்டியல் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ ஜிகாஃபைபர் காம்போ சலுகையை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகாஃபைபர் காம்போ சலுகையில் பயனர்களுக்கு இண்டர்நெட், லேண்ட்லைன் மற்றும் தொலைகாட்சி சேவைகள் ஒரே கட்டணத்தின் கீழ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான மாத கட்டணம் ரூ. 600 என தெரிகிறது. இந்த கட்டணத்தில் ஜியோ ஜிகாஃபைபர் ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் பயனர்கள் அதிகபட்சம் 40 சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம். எனினும், இதற்கு பயனர்கள் ரூ. 1000 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

காம்போ சலுகையில் பயனர்களுக்கு 600 சேனல்களை ஏழு நாட்கள் கேட்ச்-அப் ஆப்ஷன், லேண்ட்லைன் மற்றும் 100Mbps வேகத்தில் இண்டர்நெட் சேவைகள் ரூ. 600 கட்டணத்திற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட் ஹோம் சேவைகளை இணைக்கும் போது கட்டணம் ரூ. 1000 வரை அதிகரிக்கும் என தெரிகிறது.

ஜியோ ஜிகாஃபைபர் இணைப்பு கிடைக்கும் பகுதிகளில் பயனர்கள் அதிவேக இணைய வசதியை பெற முடிவதாக கூறப்படுகிறது. எனினும், இதனை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ரூ. 4500 முன்பணம் செலுத்த வேண்டும். சில இடங்களில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 100Mbps வேகத்தில் 100 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த மூன்று மாதங்களில் இணைய சேவையுடன் தொலைபேசி மற்றும் தொலைகாட்சி சேவைகளும் இணைக்கப்பட இருக்கிறது. மூன்று சேவைகளும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஜியோவின் லேண்ட்லைன் சேவையுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தொலைகாட்சி சேனல்கள் IPTV மூலம் ஸ்டிரீம் செய்யப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து ஜியோ தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஜியோ ஜிகாஃபைபர் சலுகைகள் நாடு முழுக்க 1600 நகரங்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டியை வழங்க ஜியோ ஹாத்வே நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.