அந்த மாதமும் ஜியோ தான் டாப் – டிராய் அறிவிப்பு

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 80.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது.

அந்த வகையில் ஏப்ரல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 31.48 கோடியாகும். இந்த மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுமார் 2.28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது. பி.எஸ்.என்.எல். நிறுவன மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 11.59 கோடியாகும்.

இந்தியாவில் மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 0.04 சதவிகிதம் அதிகரித்து ஏப்ரல் மாத இறுதியில் 116.23 கோடியாக இருக்கிறது. வயர்லெஸ் சந்ததாரர்கள் எண்ணிக்கை 65.04 கோடியில் இருந்து 65.23 கோடியாக அதிகரித்துள்ள நிலையில், ஊரக பகுதிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 51.13 கோடியில் இருந்து 50.95 கோடியாக குறைந்திருக்கிறது.

டெலிகாம் சந்தையின் மற்ற நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா வோடபோன் லிமிட்டெட் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை இழந்திருக்கின்றன. பாரதி ஏர்டெல் நிறுவனம் 32.89 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 15.82 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்திருக்கின்றன.

இருநிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்சமயம் முறையே 32.19 கோடி மற்றும் 39.32 கோடியாக இருக்கிறது.