ஒன்பிளஸ் டி.வி. விரைவில் வெளியீடு

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட் டி.வி.யினை மிகவிரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் டி.வி. சந்தையில் களமிறங்கும் முடிவினை ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ கடந்த ஆண்டு அறிவித்தார்.

அந்த வகையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டி.வி. மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் டி.வி. மிக விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டாக அறிமுகமான ஒன்பிளஸ், உயர் ரக சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் மாடல்களை சரியான விலையில் வழங்கி பிரபல நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஒன்பிளஸ் கவனம் புதிதாக டி.வி.க்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.

புதிய ஸ்மார்ட் டி.வி.க்கென செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மூலம் இயங்கும் அசிஸ்டண்ட் சேவை உருவாக்கப்படுவதாக பீட் லௌ தெரிவித்திருந்தார். அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் உயர் ரக ஹார்டுவேர், பயனர்களுக்கு தலைசிறந்த அனுபவம் வழங்கும் என தெரிகிறது.

ஸ்மார்ட் டி.வி. திட்டத்தை மட்டும் உறுதிப்படுத்திய பீட் லௌ அதன் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும், புதிய டி.வி.யில் ஹெச்.டி.ஆர். தரத்தில் 4K டிஸ்ப்ளே, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்று ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதி போன்ற அம்சங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.