மைக்ரோசாஃப்ட் மடிக்கக்கூடிய சாதனம் – விண்டோஸ் தளத்தில் ஆண்ட்ராய்டு செயலி வசதி கொண்டிருக்கும்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாகவும், இந்த சாதனம் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் சாதனத்தில் இரண்டு 9-இன்ச் ஸ்கிரீன்கள் முறையே 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என ஐ.ஹெச்.எஸ். மார்கிட் இணை இயக்குனர் ஜெஃப் லின் தெரிவித்தார். இந்த சாதனம் 2020 ஆண்டின் முதல் காலாண்டு அல்லது அரையாண்டு வாக்கில் அறிமுகமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

– புதிய சாதனம் விண்டோஸ் 10 புதிய பதிப்பை கொண்டிருக்கும். இது இரட்டை டிஸ்ப்ளேக்களில் சீராக இயங்கும் படி விண்டோஸ் கோர் ஒ.எஸ். வெர்ஷன் ஆகும்.

– இதில் இன்டெல் 10 என்.எம். (நானோமீட்டர்) சிஸ்டம் கொண்ட சிப்செட் வழங்கப்படலாம்.

– விண்டோஸ் 10 தளத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐகிளவுட் சேவைகளை இயக்கும் வசதி கொண்டிருக்கும்.

– ஆல்வேஸ் ஆன் கனெக்டிவிட்டி அம்சம் கொண்டிருக்கும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இரட்டை ஸ்கிரீன் கொண்ட மொபைல் சாதனத்தை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. வரும் ஆண்டுகளில் மடிக்கக்கூடிய வடிவமைப்பில் பல்வேறு சாதனங்கள் உருவாக்கப்படலாம்.

சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்களின் மடிக்கக்கூடிய சாதனங்கள் சந்தையில் அறிமுகமாகி, விரைவில் விற்பனைக்கு வரயிருக்கின்றன. இரு நிறுவனங்களின் மடிக்கக்கூடிய சாதனங்கள் ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டன.

எனினும், சாம்சங் சாதனத்தின் டிஸ்ப்ளேவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்நிறுவனம் விற்பனை தேதியை மாற்றியமைத்தது. இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனமும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை தள்ளிவைத்தது. ஹூவாய் தனது மடிக்கக்கூடிய சாதனம் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் மடிக்கக்கூடிய சாதனம் பற்றி இதுவரை அந்நிறுவனம் எவ்வித தகவலும் வழங்கவில்லை.