விற்பனைக்கு தயாரான ஹூவாய் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை மே மாத வாக்கில் துவங்க இருந்த நிலையில், ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் கூடுதலாக சோதனைகளை மேற்கொள்வதாக கூறி விற்பனை தேதியை தேதி குறிப்பிடாமல் மாற்றியமைத்தது.

இந்நிலையில், ஐரோப்பிய பகுதிக்கான ஹூவாய் நிறுவன தலைவர் விண்சென்ட் பேங், மேட் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் அல்லது அதற்கு முன்னதாகவே விற்பனைக்கு வரும் என தெரிவித்திருக்கிறார். புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார். உலகில் 5ஜி சேவை கிடைக்கும் சந்தைகளில் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனை வெளியிட ஹூவாய் திட்டமிட்டுள்ளது.

சீனா போன்ற சந்தைகளில் 5ஜி சேவை வெளியாக காலதாமதம் ஆனதே விற்பனை தாமதத்திற்கும் காரணம் என பேங் தெரிவித்தார். இதனிடையே சாதனத்தில் வழங்கியிருக்கும் P-OLED ஸ்கிரீன்களை மேம்படுத்தி ஸ்மார்ட்போனினை அதிகளவு சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஏற்பட்டதை போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவே ஹூவாய் தனது மேட் எக்ஸ் விற்பனையை தள்ளிவைத்ததாகவும் கூறப்பட்டது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவை பொருத்தவரை மடிக்கப்பட்ட நிலையில் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் 2480×1148 பிக்சல் முன்பக்க பேனல், பின்புறம் 6.38 இன்ச் 2480×892 பிக்சல், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8.0 இன்ச் 2480×2200 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஹூவாயின் கிரின் 980 7 என்.எம். சிப்செட், டூயல் என்.பி.யு. மற்றும் பலோங் 5000 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.1.1 இயங்குதளம் கொண்டு இயங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சாரும் பொருத்தப்பட்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா லெய்கா கேமராக்கள் – 40 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா கொண்டே செல்ஃபிக்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.