சோனி வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சோனி இந்தியா நிறுவனம் இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல்கள் சோனி WI-C310 மற்றும் WI-C200 என அழைக்கப்படுகின்றன. இரண்டு இயர்போன்களும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

புதிய இயர்போன்களில் பிளாஸ்டிக் நெக்பேண்டிற்கு மாற்றாக இரண்டு இயர்பட்களை இணைக்க வெறும் வையர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. புதிய இயர்போன்கள் இந்தியா முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சோனி WI-C310 மற்றும் WI-C200 இயர்போன்கள் வெறும் 15 கிராம் எடை கொண்டிருக்கிறது. நெக்பேண்ட் இல்லாமல் இந்த ஹெட்போனின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் இசையை தொடர்ச்சியாக நீண்ட நேரம் கேட்டு ரசிக்க முடியும். இரு இயர்போன்களும் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வசதியும் குவிக் சார்ஜ் வசதியும் வழங்கும் என சோனி தெரிவித்துள்ளது.

பேட்டரி குறையும் போது 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பிளேபேக் வழங்கும். இரண்டு இயர்போன்களிலும் சோனி யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கியிருக்கிறது. சோனியின் இரண்டு WI-C310 மற்றும் WI-C200 இயர்போன்களிலும் 9 எம்.எம். டிரைவர் யூனிட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த இயர்பட்களில் காந்த சக்தி வழங்கப்பட்டிருப்பதால் இயர்பட்கள் பயன்படுத்தாத நிலையில் தானாக இணைந்து கொள்கிறது. இவை இயர்பட்கள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டு இயர்போன்களிலும் மூன்று பட்டன்களுடன் இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மத்தியில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி போன்ற சேவையை இயக்க முடியும். இந்தியாவில் சோனி WI-C310 இயர்போனின் விலை ரூ.2,990 என்றும் WI-C200 இயர்போனின் விலை ரூ.2,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.