ஃபேஸ்புக் புதிய சேவை இந்தியாவில் வெளியாகாது

ஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரென்சி மற்றும் கலிப்ரா டிஜிட்டல் வாலெட் சேவைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய டிஜிட்டல் காயின் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், லிப்ரா மற்றும் கலிப்ரா சேவைகள் இந்தியாவில் தற்சமயம் வெளியாகும் வாய்ப்புகள் மிக குறைவு தான்.

தற்போதைய விதிமுறைகளின் படி இந்தியாவில் பிளாக்செயின் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியுாது. கலிப்ரா டிஜிட்டல் வாலெட் வாட்ஸ்அப் செயலியில் உலகம் முழுக்க வழங்கப்படும். ஆனாலும், இது இந்தியாவில் வழங்கப்படாது.

இந்தியா மட்டுமின்றி க்ரிப்டோகரென்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளிலும் இதே நிலை தான். ஃபேஸ்புக் நிறுவனம் தனது க்ரிப்டோகரென்சியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் இதுவரை எவ்வித விண்ணப்பத்தையும் சமர்பிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென் மற்றும் டிஜிட்டல் வாலெட் சேவையில் 28 நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. இவற்றில் பேயு, உபெர், மாஸ்டர்கார்டு மற்றும் விசா போன்ற பெரும் நிறுவனங்களும் அடங்கும். இவை வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் உள்ளிட்டவற்றில் விர்ச்சுவல் கரென்சியை அனுமதிக்கும். க்ரிப்டோகரென்சி வெளியாகும் போது 100 நிறுவனங்கள் இணைத்துக்கொள்ள ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.