ஐபோன் விற்பனையை அதிகரிக்க வேறு வழியில்லை! ஆப்பிள் ஸ்மார்ட் பிளான் ரெடி?

ஆப்பிள் நிறுவனத்திற்கு சமீபத்திய நாட்கள் அத்தனை சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம். உலகில் இருக்கும் அனைத்து ஐபோன் மற்றும் ஐபேட்களையும் எங்களால் ஹேக் செய்ய முடியும் என ஹேக்கர்கள் குழு வெளியிட்ட அதிரடி அறிக்கை ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி அதன் வாடிக்கையாளர்களையும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவற்றுடன் 2020 ஐபோன் மாடல்களின் விவரங்கள் அடுத்தடுத்து இணையத்தில் வெளியான சம்பவங்கள் 2019 ஐபோன்களுக்கு இருந்து வந்த எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி விட்டது. இதெல்லாம் எங்களை எதுவும் செய்யாது என்ற வகையில் ஆப்பிள் நிறுவன குரலாக, 2019 ஐபோன்கள் பற்றி சுவாரஸ்ய விவரங்களை ஆப்பிள் வல்லுநர் வெளியிட்டிருக்கிறார்.

பிரபல ஐபோன் வல்லுநரான மிங் சி கியோ ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு 5.8 இன்ச் ஐபோன் X / XS / 11 மாடல்களை அறிமுகம் செய்யாது என தெரிவித்திருக்கிறார். இதற்கு மாற்றாக ஆப்பிள் ஐபோன் எஸ்.இ. மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், 2019 ஐபோன் எஸ்.இ. மாடலில் ஃபிளாக்ஷிப் ரக சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பெரிய அளவு கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் நிலையில், ஆப்பிளின் திடீர் முடிவு சுவாரஸ்யம் நிறைந்த குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் ஆப்பிள் எதிர்பார்க்கும் வெற்றியை நிச்சயம் கொடுக்கும் என கியோ தெரிவிக்கிறார்.

2019 ஐபோன் 5.4 இன்ச் அளவில் உருவாக்கப்படும். இதில் பெசல்-லெஸ் வடிவமைப்பு வழங்கப்படும். இது உண்மையாகும் பட்சத்தில் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ஆப்பிள் பிரியர்கள் மீண்டும் கையடக்க ஐபோன் மாடல்களை பயன்படுத்துவர்.

முன்னதாக ஐபோன் 5 மாடல் கையடக்க அளவில் வெளியாகி, சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. பின் ஆப்பிள் 5.44 இன்ச் கொண்ட ஐபோன் 8 மாடலை வெளியிட்டது. எனினும், இதனுடன் வெளியான ஐபோன் 8 பிளஸ் அதிகளவு சிறப்பம்சங்களை கொண்டிருந்தது.

சமீப காலங்களில் பெரிய ஐபோன்களை பயன்படுத்தியவர்கள் மீண்டும் சிறிய ரக ஐபோன்களை வாங்குவார்களா? என்ற கேள்விக்கு சந்தை வட்டாரங்கள் முழுக்க ஆம் என்ற பதிலைத் தான் வழங்குகின்றன.

Photo Courtesy: BEN GESKIN